Sunday, September 21, 2014

பத்தோடு, பதினொன்றாய் ஒரு caption!

"சின்னதாய் ஒரு ஜாலி போட்டி ! இங்குள்ள நம் நண்பர் (நண்பர்) XIII -க்கும் 'தல + தாத்தா ' சித்திரத்துக்குப் பொருத்தமாய் captions எதாச்சும் எழுதிடுவோமா ? "


- என்று லயன், முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு.எஸ்.விஜயன் அறிவித்திருக்கும் இந்தவார போட்டிக்கு என் கற்பனைக்கு எட்டியவரை வரிகளைப் போட்டிருக்கிறேன். போட்டியில் எத்தனையாவது இடம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்!

(கிடைத்தாலும் பரிசு எப்படியோ வரப்போவதில்லை. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் பெயர் அறிவிக்கப்பட்டது, பரிசுதான்... கண்ல காட்டவேயில்லப்பா....!!!) :-)

Wednesday, August 7, 2013

Lion-Muthu Comics: தொடரும் ஒரு திருவிழா...!

To : Mr.Vijayan, Editor Lion, Muthu, Sunshine Library - Comics

வார இறுதி வருமுன்பே அதிரடி போஸ்ட் போட்ட ஆந்தை விழியாருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். அறிவிப்புகள் ஆஹாஹா...ஹா... (இப்போ வெறும் அறிவிப்புகளோடே நிற்காமல் அவை செயல்வடிவும் பெறுவதால் எந்தவித டவுட்டுமில்லாத சந்தோஷ ஒலிக்குறிப்பு!!).

Note: இரத்தப்படலம் - நீங்கள் கொடுத்த காட்சி இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு ஜில்பாஸா -- இங்கே: (கட்டை விரலை மட்டுமல்ல காலையே வாய்க்குள் நுழைக்க உங்களை தூண்டும் ஒரு முயற்சி!)

Saturday, January 12, 2013

காமிக்ஸ் உலகம்!

நீ.................ண்.......ட நாட்களாக இப்படியொரு வலைப்பதிவை ஆரம்பித்து தொடரவேண்டும் என்பது என் உள்மன ஆசை! ஆனால், போதுமான நேரமும்- அதற்கான பொறுமையும் இதுவரை வாய்த்ததில்லை. ஆயினும், நேற்றைய தினம் தமிழ் காமிக்ஸ் உலகில் நடந்தேறியிருக்கும் ஓர் அற்புத நிகழ்வைத் தொடர்ந்தாவது பதிவை ஆரம்பிக்காவிட்டால் - இனி அதற்கான சந்தர்ப்பமே இல்லாமற் போய்விடும் என்ற பதட்டத்தோடு இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். (அந்த அற்புத நிகழ்வு என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் - தெரியாதவர்களுக்கு பதிவைப் படிக்கும்போது புரியும்).

லயன், முத்து காமிக்ஸ்களின் ஆசிரியர் திரு.எஸ்.விஜயன் அவர்களுக்கும், முத்துகாமிக்ஸ் இன் ஸ்தாபக ஆசிரியர் திரு.எம்.சௌந்திரபாண்டியன் அவர்களுக்கும் தமிழ் காமிக்ஸ் பற்றி எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் சமீபகாலமாகவும் அற்புதமாக எழுதிவரும் அத்தனை பதிவர்களுக்கும் என் முதல் நன்றிகள். உங்களது புதிவுகளின் தாக்கமே இந்தப் பதிவின் ஆரம்பம்!
----------------------------------------------------------------------------------------------------------
'வாசிப்பு' என்கிற பதம் - இணையத்துக்கு இடம்மாறிப் பல ஆண்டுகளாகிவிட்டன. அதுவும் சுருங்கி, Facebook Comments மட்டும் வாசிக்கும் 'அற்புத'ப் பழக்கமாக மாறிச் சில வருடங்கள் கடந்தும் ஆயிற்று. ஆனாலும், பிடிவாதமாய் - காகிதத்தில் அச்சேறிய புத்தகங்களைப் பிரித்துப் படிக்கும் ஒரு கும்பலும் (!!!) இன்றுவரை தமிழ் பேசும் நல்லுலகத்தில் தொக்கி - எஞ்சி நிற்கிறதே என்பது ஆச்சரியமான ஒரு தகவல்; இன்றைய காலகட்டத்தில்!

'ஏன் வாசிப்பு எம்மைவிட்டு விலகிப் போயிற்று?' என்று மண்டையைக் குடைந்து தேடும் அவசியம் யாருக்கும் ஏற்படாது. காரணங்கள் ஏராளம். கணினி, கேபிள்-ரீவி, மொபைல், ஐ-பாட், மாணவர்களின் பாடச்சுமை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

'வாசிப்பு' என்பது - ஓர் அருமையான தியானம்.
வேறு எந்தச் செயலிலும் புலன் செல்லாமல், எங்கள் கண்ணும் கருத்தும் நாக்கும் (எச்சில் தொட்டு பக்கம் புரட்ட - இனி யாரும் எனக்கு புத்தகம் கடன் தரமாட்டார்கள்), மூக்கும் (அச்சு மையின் நறுமணம் இருக்கிறதே... ஆஹா.. அதில்தான் எத்தனை எத்தனை ரகம்!) - இப்படி எல்லாம் ஒருங்கிணைந்து ஒரே நோக்கத்தோடு சில மணித்துளிகளைப் பிடித்துவைத்திருக்குமே - அது தியானம் இல்லாமல் வேறென்ன?

அந்தத் தியான வழக்கத்தை விட்டுவிட்டதால்தான் இன்று எமக்கு - உயர் இரத்த அழுத்தங்களும், கோப வேகங்களும் வந்து சேர்ந்துவிட்டதாய்த் தோன்றுகிறது எனக்கு.


'வாசிப்பு' என்று சொல்லும்போது, எனது அடிப்படைகள் ஆரம்பித்தது - அம்புலிமாமாவில். பின்னர் அது ரத்னபாலா, கோகுலம் (இன்றைய Kogulam Rc அல்ல!), பூந்தளிர், ராணி காமிக்ஸ், முத்து, லயன், மினி லயன், ஜூனியர் லயன், திகில், க்ளாஸிக்ஸ் காமிக்ஸ்கள் என்று வளர்ந்து நாவல்கள், இலக்கியம், அறிவியல், கவிதை என்று எங்கெங்கோ இழுபட்டுப்போய் நிற்கிறது.

பலவற்றைத் தொட்டுப்பார்க்கவும் நேரமில்லாவிட்டாலும், இன்றுவரை என் பின்னால் என் நிழலுக்கும் மேலால் நடந்துவந்து கொண்டிருக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. அது காமிக்ஸ் வாசிக்கும் பழக்கம்!

அடுத்தடுத்த வருடங்களில் என் மகனோடு போட்டிபோட்டு இந்தக் காமிக்ஸ்களை வாசிப்பதற்காகவே என்னை நான் சிறப்புப் பயிற்சிகளுடன் தயாராக்கி (திருமதியின் முறைப்புக்களோடு) வைத்திருக்கிறேன்!

அப்படி என்ன இருக்கிறது இந்தக் காமிக்ஸ் புத்தகங்களில்?

அது ஒரு தனி உலகம் - 'அலிஸ் இன் வொண்டர் லாண்ட்' போல - இதில் இறங்கி வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் - காமிக்ஸ் ஒரு வொண்டர் லாண்ட் தான்!

இன்று 'டிஸ்னி லாண்ட்', 'லெஷர் வேர்ல்ட்', 'கிஷ்கிந்தா' என்று குழந்தைகளும் பெரியவர்களும் புகுந்து குதூகலிக்கும் இடங்களெல்லாம் - இருபது வருடங்களுக்கு முன்பிருந்து நான் நுழைந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தக் 'காமிக்ஸ் உலக'த்துக்கு ஈடாகுமா என்றால், நிச்சயம் இல்லை!

வாசிக்க வாசிக்க - எங்கள் கண்முன்னே விரியும் அரிசோனா பாலை நிலப் பரப்புக்களும், ஆபிரிக்காவின் தங்கச் சுரங்கங்களும், ஐரோப்பாவின் ஈபிள் கோபுரங்களும், அண்டார்ட்டிக்காவின் பனிச் சிகரங்களும் எனக்குத் தந்த அனுபவங்கள் - எழுத்தில் விபரிக்க இயலாதவை. அந்த அனுபவத்தை இன்றைய குழந்தைகள் தவறவிட்டுக்கொண்டிருக்கிறார்களே என்ற ஆதங்கத்தைவிட, அவற்றைத் தங்கள் குழந்தைகளுக்குக் காட்ட மறந்த அல்லது மறுத்து நிற்கும் இன்றைய பெற்றோரின்மீது கோபம்தான் அதிகமாய் வருகிறது! இன்னொரு காமிக்ஸ் எடுத்து வாசித்துத்தான் அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தும் நிலை!

இது வெறும் எழுத்து ஜாலத்துக்காக எழுதப்பட்ட விடயமல்ல- என் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஏக்கங்களே எழுத்துக்களாய் வருகின்றன-

பத்தாயிரம் ரூபாவுக்கு மொபைல் போனை வாங்கி ஏழு வயதுப் பிள்ளைக்குப் பரிசளிக்கும் பலரில் ஒருவராவது, அவர்களுக்கு வாசிப்பதற்கு நூற்றைம்பது ரூபாவுக்கு ஒரு கதைப் புத்தகம் வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று சிந்திக்கிறார்களா என்றால் - இல்லை!

வாசிப்பு என்பது -

குழந்தைகளின் கற்பனை வளத்தை அதிகரிக்கிறது. அவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுகிறது.

நம்மைச் சுற்றி நடந்தவைகளை, நடப்பவைகளை, நடக்கவிருப்பவற்றை மிகத் துல்லியமாகவும், இலகுவாகவும் அவர்களுக்குப் புரியவைக்கிறது.

அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

சாதிக்கும் உத்வேகத்தைக் கொடுக்கிறது.

நல்லவை எவை, தீயவை எவை என்ற பாகுபாட்டை யாரும் சொல்லிக்கொடுக்காமலே புரியவைக்கிறது.

மனிதர்களின் நடத்தைகளை வைத்து அவர்களது குணங்களைக் கண்டறியச் செய்கிறது.

பொதுவாகச் சொன்னால், எங்கள் கால்களைச் சுற்றிப் பொம்மைகளாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை மனிதர்களாக்குவதில் வாசிப்பின் பங்கு மகத்தானது!

இந்த வாசிப்பைத் தூண்டுவதற்கு மிகச்சிறந்த ஊடகம் - இந்தச் சித்திரக் கதைகள்!

இன்று சிறுவர்களுக்கான பத்திரிகைகள் இல்லை என்ற நிலையில் எஞ்சியிருப்பவை ஒரு சில காமிக்ஸ்கள் மட்டுமே!

ஆங்கிலத்திலும், வேற்று மொழிகளிலும் காமிக்ஸ்கள் நாளுக்குநாள் வெளிவந்து குவிந்துகொண்டிருக்க, தமிழில் - தென்னிந்தியாவிலிருந்து மாதமொருமுறை வந்தாலும் வரலாம் என்ற நிலையில் வந்துகொண்டிருந்தவை முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள்.

கடந்த வருடத்திலிருந்து இந்த இரண்டு காமிக்ஸ்களும் பெற்றிருக்கும் புதுவேகம் புது நம்பிக்கையைத் தருகிறது. அந்த நம்பிக்கை வாசகர்களுக்கு மட்டுமல்ல பிரசுரிப்பாளர்களுக்கும் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இன்று இந்தக் காமிக்ஸ்களின் வாசகர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பத்துப் பதினைந்து வருடங்களாக அவற்றை வாசித்துவந்து இன்று பெற்றோர் நிலையில் இருப்பவர்கள் - இன்றைய இளைய தலைமுறை பெரும்பாலும் காமிக்ஸ்இலிருந்து தூர விலகிப்போய்விட்டது! இதனால், பெரியவர்களும் சிறுவர்களுமாக எத்தலைமுறையினரும் வாசிக்கக்கூடிய நிலையிலிருந்து காமிக்ஸ்கள் விலகி, 'பெரியவர்களுக்கானவை' ஆகிவிடுமோ? என்ற ஏக்கம் எழுகிறது.
--------------------------------------------------------------------------------------------


அன்று கறுப்பு வெள்ளையில், சாணித்தாள்களில் சிறிய வடிவில் வந்துகொண்டிருந்த காமிக்ஸ்கள், இன்று அசுர வளர்ச்சி கண்டு புதியதொரு பரிணாம வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

வர்ணத்தில், ஆர்ட் பேப்பரில் அசரவைக்கும் அழகோடு இன்று வெளிவரும் முத்து, லயன் காமிக்ஸ்கள் பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் வகையில் இருக்கின்றன.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை உட்படப் பல நாடுகளிலிருந்தும் கிடைத்திருக்கும் அபரிமிதமான வரவேற்பு, வெளியீட்டாளர்களைப் பல புதிய முயற்சிகளைச் செய்யத் தூண்டுகிறது. அதன் ஒரு வெளிப்பாடே, நேற்றைய தினம் சென்னைப் புத்தகத் திருவிழாவில் வைத்து வெளியிடப்பட்டிருக்கும் முத்து காமிக்ஸ்இன் 40ஆவது ஆண்டு நிறைவு மலரான Never Before Special- ! இந்தப் புத்தகம் இலங்கை வந்துசேர சில தினங்கள் ஆகுமென்பதால் அது பற்றிய விரிவான பதிவுகளை இங்கே தரவியலவில்லை. ஆயினும், இந்திய நண்பர்களது பதிவுகளிலிருந்து கிடைத்த சில விடயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
Never Before Special இதழின் அட்டகாசமான அட்டைப்படம்!
முத்து காமிக்ஸ் இன் முதலாவது இதழ் - அன்றும் இன்றும் என்றும் ரசிக்கும் நாயகன்: இரும்புக்கை மாயாவி!
Never Before Special இதழ், முத்து காமிக்ஸ்இன் ஸ்தாபக ஆசிரியர் எம்.சௌந்திரபாண்டியன் அவர்களால் வெளியிடப்படுகிறது.
படங்களில்: லயன், முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு.எஸ்.விஜயன், அவரது புதல்வர் மற்றும் வாசக நண்பர்கள்.
பட உதவி: Comicology
பி.கு.: இதழில் இதுவரை வெளிவந்துள்ள முத்து காமிக்ஸ்களில் மறக்கவியலாத கதைகள் 5 என்ற பட்டியலில் எனதும் நண்பர் விமலாகரனினதும் தெரிவுகள் இடம்பிடித்துள்ளன!

மீண்டும் ஒரு 'வாசிப்புக் காலம்' மலரும் என்ற நம்பிக்கையோடு அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே!

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவில் பயன்படுத்தியுள்ள படங்கள் அனைத்தும் Google இல் தேடி எடுத்தவையே! நான் Scan செய்தவையல்ல. Scan செய்து வலையேற்றியிருந்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.